சுவிசேஷம்


கர்த்தராகிய இயேசுவின் கட்டளை: "உலகமெங்கும் சென்று நற்செய்தியைப் பிரசங்கியுங்கள்.” (மத்தேயு 28:19)

திபெத்திய சுவிசேஷப் பணி

1983, டிசம்பர் 24 அன்று, சகோதரர் சாது சுந்தர் செல்வராஜ் அவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இயற்கைக்கு அப்பாற்பட்ட சந்திப்பைப் பெற்றார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவருக்கு ஆவியில் தோன்றி, பழம்புகழ்பெற்ற சாது சுந்தர் சிங் ஐயா அவர்களைப்பற்றியும், திபெத்தில் சாது சுந்தர் சிங் ஐயா செய்த ஊழியத்தைப் பற்றியும் அவரிடம் பேசத் தொடங்கினார். இயேசு கிறிஸ்து அவரிடம் சுமார் 20 நிமிடங்கள் பேசினார். அப்போது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சுந்தர் செல்வராஜிடம், “நீ அந்த ஊழியத்தைத் தொடர்வாயா?” என்று கேட்டார். எந்தத் தயக்கமும் இல்லாமல் செல்வராஜ் "ஆம் கர்த்தரே!" என்று பதிலளித்தார். தேவன் சிரித்துக்கொண்டே, "அலட்சியமாகப் பதில் சொல்லாதே! இது மிகவும் கடினமான ஊழியம், அதிகத் துன்பங்கள் நிறைந்தது. நீ தனிமை, ஒதுக்கப்படுதல் பசி, வலி மற்றும் துன்புறுத்தல்களை அனுபவிக்க நேரிடலாம். இப்போது சொல்! இந்த ஊழியத்தை ஏற்றுக் கொள்வாயா?" என்றார். கர்த்தராகிய இயேசுவின் முன் பணிவுடன் மண்டியிட்ட செல்வராஜ், "ஆம் கர்த்தாவே! நான் சாது சுந்தர் சிங் ஐயாவின் ஊழியத்தைத் தொடர்வேன்" என்று பதிலளித்தார். அந்தப் பதிலில் மகிழ்ச்சியடைந்த கர்த்தர், செல்வராஜை நோக்கி வந்து ஒரு மேலங்கியை அவர்மேல் வைத்தார். அப்போது கர்த்தராகிய இயேசு அவர் மீது கைகளை வைத்து, "நான் உன்னை திபெத்துக்கு அப்போஸ்தலனாக நியமிக்கிறேன். திபெத்துக்கும் அதன் மக்களுக்கும் நற்செய்தி கூறச் செல்! இன்று முதல் நீ 'சாது சுந்தர் செல்வராஜ்' என்று அழைக்கப்படுவாய்" என்றார்.

இரண்டு வருடங்கள் ஜெபித்து, தேவனுக்காகக் காத்திருந்த பிறகு, கர்த்தராகிய இயேசு திபெத்தியர்களை அணுக முறையான ஒரு திட்டத்தை வெளிப்படுத்தினார். 1986 முதல் 2006 வரை, திபெத்தியர்களுக்குத் தேவனின் சுகமளிக்கும் அன்பைக் கொண்டுவருவதற்காக சகோதரர் சாது சுந்தர் செல்வராஜ் ஒவ்வொரு ஆண்டும் திபெத்துக்குத் தவறாமல் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டார்.

அதிசய ஷங்க்ரிலா

திபெத்தியர்கள் சமூகம், ‘மலைகளின் மேல், ‘பனி நிலத்தில்’ வசிப்பவர்கள், சீனாவின் வெகு தொலைவில் மேற்கில் 4,000 - 5,000 மீ (12,000 - 16,000 அடி) உயரத்தில் வசிக்கும் எட்டப்படாத மக்கள் குழுவாகும். 'திபெத்' மர்மம் மற்றும் மாந்திரீகத்தால் சூழப்பட்ட ஒரு பரந்த, தொலைதூரப் பகுதியாகும். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பெரிய இமய பீடபூமியில் 'திபெத்' அமைந்துள்ளது.

TheTibetans

திபெத்தின் உயரமான மலைகளும் கடுமையான வானிலையும் மிஷனரிகள் கடந்து செல்வதற்கு எதிராகத் தடையாக உள்ளன. இதன் விளைவாக, இலட்சக்கணக்கான திபெத்தியர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய 'நற்செய்தியை' இன்னும் கேள்விப்படவில்லை.

யார் அந்த திபெத்தியர்கள்?

அவர்கள் மாசற்ற மனம் கொண்டவர்கள்; அன்பான இதயம் கொண்டவர்கள்; தாராள மனப்பான்மை கொண்டவர்கள்; ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உடையவர்கள் மற்றும் நாடோடி மக்கள். திபெத்திய நாடோடிகள் புல்வெளிகளில் சுற்றித் திரிகிறார்கள். நிலங்களில் குடியேறிய மக்கள் வளமான பள்ளத்தாக்குகளில் வாழ்கின்றனர், பார்லி, செம்மறி ஆடு, கடமா, ஆடுகள் மற்றும் குதிரைகளை வளர்த்து வருகின்றனர். திபெத்தியர்கள் கிராமங்களில், தட்டையான கூரையுடன் கூடிய மண் வீடுகளில் வாழ்கின்றனர். பேய்களுக்கு கறுப்பு நாக்கு உண்டு, மனிதருக்குக் கறுப்பு நாக்கில்லை என அவர்கள் நம்புவார்கள். எனவே, கிராமப்புற திபெத்தியர்கள் ஒருவரையொருவர் வாழ்த்தும்போது, அவர்கள் நாக்கை நீட்டி சீறும் சத்தமிடுவார்கள். ‘தான் ஒரு மனிதர், பேய் அல்ல' என்பதை இது மற்றவருக்குக் காட்டுகிறது.

1959-இல் சீனா திபெத்தை தன் நிலத்தின் ஒரு பகுதியாகக் கோரிக் கொண்டது. இது இப்போது திபெத்திய தன்னாட்சிப் பகுதி என்று அழைக்கப்படுகிறது. சுமார் 2.5 மில்லியன் திபெத்தியர்கள் திபெத் மற்றும் சீன மாகாணங்களான ச்சிங்காய், கன்சு, சிச்சுவான் மற்றும் யுனான் ஆகிய இடங்களில் வாழ்கின்றனர். அவர்கள் உறுதியான தேசியவாதிகள்; ஆன்மீக மற்றும் அரசியல் தலைவர் என்று கருதப்படும் நாடு கடத்தப்பட்ட தலாய் லாமாவை ‘தெய்வீக ராஜா', என ஆராதிக்கிறார்கள். சுவிசேஷ நற்செய்தியைக் கொண்டுவருவதற்கான எந்தவொரு முயற்சியையும் திபெத்தியர்கள் நீண்டகாலமாக எதிர்த்துள்ளனர்.

திபெத்தியர்கள் எதை நம்புகிறார்கள்?

அவர்களின் புன்னகைக்குப் பின்னால் சிலை மற்றும் பேய் வழிபாடு நிறைந்த ஒரு மதம் உள்ளது. அதுதான் திபெத்திய பௌத்தம். வைதீகமான பௌத்த போதனைகள் பூர்வீக ஆன்மிகவாதப் பான் மதத்துடன் பிண்ணிப் பிணையப்பட்டுள்ளன. (பான் என்பது மனித உயிர் பலியிடுதல் மற்றும் ஆவிகள் மற்றும் பேய்களை வழிபடும் ஓர் அமானுஷ்ய மதம்). பௌத்த மதத்தில் பிரார்த்தனைக் கொடிகளைப் பறக்க வைப்பது மற்றும் பிரார்த்தனை சக்கரங்களைத் திருப்புவது போன்ற பல சடங்குகளை நடத்துவர். இந்தச் சடங்குகள் தாந்திரீக பௌத்தத்தின் இரகசிய நடைமுறைகளுடன் இணைந்து 'லமாயிசம்' எனப்படும் திபெத்திய பௌத்தமாகப் பரிணமித்துள்ளது. ஒரு பொதுவான திபெத்தியரின் வாழ்க்கை பிரார்த்தனை, பறக்கும் சக்கரங்கள், தூப வர்க்கம் வழங்குதல் மற்றும் மாயச் சொற்றொடர்களை ஓதுதல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அடுத்த மறுபிறப்பில் சிறந்த வாழ்வைப்பெற, முடிந்தவரை தகுதிகளைக் குவிப்பதே அவர்களின் குறிக்கோள் ஆகும்.

அங்கு கிறிஸ்தவர்கள் இருக்கிறார்களா?

திபெத்தில் சில திபெத்தியர்களும், இந்தியா மற்றும் நேபாளத்தில் சுமார் 200 பேரும் கிறிஸ்தவர்களாக உள்ளனர். திபெத்தில் சீனக் கிறிஸ்தவர்கள் ஓரிரு வீடுகளில் சபைகளை நடத்தினர். மேலும், இந்தியாவிலும் நேபாளத்திலும் சில தேவாலயங்கள் திபெத்தியர்கள் மற்றும் லடாக்கியர்களால் நடத்தப்படுகின்றன. திபெத்தியர்களுக்கு நற்செய்தியைப் பகிர்வது ஒரு கடினமான ஆவிக்குரியப் போராகவே இருந்து வருகிறது.

சாது சுந்தர் சிங்

இரத்தம் தோய்ந்த பாதங்களுடன் அப்போஸ்தலன்

SadhuSundarSingh-1

Sadhu Sundar Singh
(1889 - 1929)

சாது சுந்தர் சிங் 1929-இல் இமயமலையின் அடிவாரத்தில் மறைந்தார். ஒரு சிறந்த கிறிஸ்தவ சாட்சியான அவர், நிராகரிக்கப்பட்டார்; துரத்தப்பட்டார்; துன்புறுத்தப்பட்டார்; மேலும் உயிருக்கான ஆபத்தையும் எதிர்நோக்கினார். பல மிஷனரிகள் மற்றும் இந்திய கிறிஸ்தவத் தலைவர்கள் கூட அவரை மிகவும் அசாதாரணமான நபராகக் கருதினர், தற்காலத்துக் கிறிஸ்தவத்திற்கு முற்றிலும் புறம்பாக அவர் தனது மஞ்சள் அங்கி மற்றும் தலைப்பாகையுடன் சாலைகளில் சுற்றித்திரிந்தார். இன்னும், அவர் 'இந்தியப் பூர்விகம்' என்ற வார்த்தையை ஒருபோதும் கேட்கவில்லை என்றாலும், இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் "இயேசு இந்தியாவைச் சேர்ந்தவர்" என்பதை நிரூபிக்க பிற ஆராய்ச்சியாளர்களை விட அதிகமாகப் பிரயாசைப்பட்டார். கிறிஸ்தவம் இறக்குமதி செய்யப்பட்ட, அந்நிய, வெளிநாட்டு மதம் அல்ல; அது இந்தியத் தேவைகள், விருப்பங்கள் மற்றும் நம்பிக்கைக்குப் பூர்வீகமானது என்று அவர் தெளிவுபடுத்தினார். அவர் இந்தியக் கிறிஸ்தவத்தில் நிரந்தரமாக, குறிப்பிடத்தக்க நபர்களில் ஒருவராக இருக்கிறார்.

சுந்தர் சிங் செப்டம்பர் 3, 1889 அன்று வட இந்தியாவின் பாட்டியாலா மாநிலத்தில் சீக்கியரில் செல்வாக்கு மிக்க மற்றும் பணக்கார நில உரிமையாளர் குடும்பத்தில் பிறந்தவர். சுந்தர் சிங்கின் பக்தியுள்ள தாய் அவரை வாரந்தோறும் சில மைல்களுக்கு அப்பால் உள்ள காட்டில் வாழ்ந்த சாதுக்களிடம் அழைத்துச் சென்று அவர்களின் பாதங்கள் அருகே அமரச்செய்தார். பின்னர் அவர் தாய் அவரை ஒரு கிறிஸ்தவ மிஷன் பள்ளிக்கு அனுப்பினார். அங்கு அவர் ஆங்கிலம் கற்றுக்கொண்டார்.

எதிர்பாராத வகையில், அவரது பதினாலாம் வயதில் நிகழ்ந்த தாயின் மரணம் அவரை வன்முறையிலும் விரக்தியிலும் ஆழ்த்தியது. அவர் மிஷனரிகளை எதிர்த்து, மதம் மாறியவர்களைத் துன்புறுத்தினார்; அவர்களின் நம்பிக்கையைக் கேலி செய்தார். கடைசியாக அவர்களின் மதத்தை எதிர்த்து, கிறிஸ்தவ வேதாகமத்தை வாங்கி, பக்கம் பக்கமாக எரித்தார். அவரது ஆன்மாவின் அமைதியின்மை மற்றும் வெற்றிடத்தைத் தணிக்க முடியாமல், மறுநாள் காலையில் ரயில் பாதையில் தற்கொலை செய்து கொள்ளும் உறுதியுடன் அவர் ஓர் இரவு அமர்ந்து இருந்தார்.

பொழுது விடிவதற்குள், அறை முழுவதும் ஒரு பிரகாசமான ஒளி மேகம் இருப்பதை சுந்தர் உணர்ந்தார். மேகத்திற்குள் ஒரு சிலுவை மற்றும் அதில் தொங்கும் ஒரு மனிதனின் உருவத்தை அவர் பார்த்ததாகத் தோன்றியது. "ஏன் என்னை எதிர்க்கிறாய்? நான் உன் இரட்சகர். உனக்காகச் சிலுவையில் மரித்தேன்" எனச் சிலுவையிலிருந்து ஒரு குரல் கேட்டது. அப்போது சுந்தர், "நீங்கள் யார் இறைவா?" என்று கேட்க, "நான் இயேசு" என்று அன்புடன் பதில் வந்தது. சுந்தர் இயேசுவின் காலில் விழுந்தார். அவர் எழுந்தபோது, அவரது இதயம் புத்திகெட்டத ஒரு அப்பாற்பட்ட, விவரிக்க முடியாத சமாதானத்தினால் நிறைந்தது.

பின்னர் அவர் ஓடி வந்து தனது தந்தையை எழுப்பி, இயேசு கிறிஸ்துவை ஒரு தரிசனத்தில் பார்த்ததாகவும், அவருடைய குரலைக் கேட்டதாகவும் தெரிவிக்கிறார். அவருடைய தந்தையும் உறவினர்களும் அவருடைய விசுவாசத்தைக் கைவிடும்படி கெஞ்சினார்கள். ஆயினும், சுந்தர் மனம் தளராமல் இருந்தார். சுந்தரின் தந்தை ஷேர் சிங், தம் குடும்பத்திலிருந்து சுந்தரை ஒதுக்கிவைத்து வெளியேற்ற முனைந்தார். அதற்கு முன் தனது மகனுக்குப் பிரியாவிடை விருந்து அளித்தார். சில மணி நேரங்களுக்குப் பிறகு, தனது உணவில் விஷம் கலந்திருந்ததை சுந்தர் உணர்ந்தார். தேவனின் கிருபையாலும், அன்பான கிறிஸ்தவக் குடும்பத்தின் உதவியாலும் அவரது உயிர் காப்பாற்றப்பட்டது.

அவரது பதினாறாவது பிறந்தநாளன்று அவர் இமயமலை அடிவாரத்தில் உள்ள சிம்லாவின் செயின்ட் தாமஸ் தேவாலயத்தில் ஒரு கிறிஸ்தவராகப் பகிரங்கமாக ஞானஸ்நானம் பெற்றார். பின்னர், அக்டோபர் 1906-இல், அவர் மஞ்சள் அங்கி மற்றும் தலைப்பாகை அணிந்து புறப்பட்டார். மஞ்சள் அங்கி என்பது ஓர் இந்து சாதுவின் ‘சீருடை'. (பாரம்பரியமாகக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட துறவிகள் சாலைகளில் பிச்சை எடுப்பர். காட்டில் அல்லது தனிமையான இடத்தில் அமர்ந்து தியானம் செய்வர்.) சுந்தர் சிங்கும் சாதுக்களின் வழியைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் அவர் ஒரு வித்தியாசமான சாதுவாக இருந்தார். "ஆண்டவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற நான் தகுதியற்றவன், ஆனால், அவரைப் போல எனக்கு வீடு, உடைமை எதுவும் வேண்டாம், அவரைப் போலவே நானும் என் மக்களின் துன்பங்களைப் பகிர்ந்துகொண்டு, எனக்கு அடைக்கலம் கொடுப்பவர்களுடன் உண்டு, எல்லா மனிதர்களுக்கும் தேவனின் அன்பைச் சொல்வேன்,” என்றார்.

SadhuSundarSingh-1

தம் 16-ஆவது வயதில் சுந்தர் பஞ்சாப், காஷ்மீர், ஆப்கானிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் வழியாக வடக்கு நோக்கி தனது ஊழியத்தைத் தொடங்கினார். அவரது மெல்லிய மஞ்சள் அங்கியால் கடும் பனியிலிருந்து அவரைப் பாதுகாக்க முடியவில்லை. மேலும், அவரது பாதங்கள் கரடுமுரடான பாதைகளில் பட்டுக் கிழிந்தன. இன்னும் சில மாதங்களில், வடக்கின் சிறிய கிறிஸ்தவ சமூகங்கள் அவரை 'இரத்தம் தோய்ந்த பாதங்களைக் கொண்ட அப்போஸ்தலன்' என்று அழைக்கத் தொடங்கினர். அவர் கல்லெறியப்பட்டார்; கைது செய்யப்பட்டார்; எதிர்பாராமல் வழியோரக் குடிசையில் நாகப்பாம்பின் துணையோடு தூங்கினார்.

பனி மூடிய இமயமலையின் நீண்ட வரிசைக்கு அப்பால் உள்ள சிம்லா மலைகளில் உள்ள கிராமங்களால் நிறைந்ததுதான் திபெத். மிஷனரிகள் நீண்ட காலமாக நற்செய்தியுடன் உட்புகுவதற்குத் தவறிய, ஒரு மூடிக்கிடந்த புத்த பூமியாகவே திபெத் இருந்தது. சுந்தர் ஞானஸ்நானம் எடுத்ததிலிருந்து, 'திபெத்' அவரை வரவேற்றது. 1908-ஆம் ஆண்டு, தனது 19-வது வயதில், அவர் பனி நிலமான திபெத்தின் எல்லைகளைக் கடந்தார். பௌத்தம் ஆதிக்கம் செலுத்தும் இந்த மூடிய பிரதேசத்திற்குள் நுழையும் வெளி நபர் பயங்கரவாதம் மற்றும் மரணம் ஆகிய இரண்டையும் சந்திக்க நேரும். சுந்தர் சிங் கிறிஸ்துவின் அன்பிற்காகத் துணிந்தார். அந்த அன்பு அவரைக் கட்டுப்படுத்தியது. அங்கு அவர் கண்ட மக்களின் நிலை அவரைத் திகைக்க வைத்தது. அவர்களைப் போலவே காற்றற்ற வீடுகளும் அசுத்தமாக இருந்தன. அவர் குளிர்ந்த நீரில் குளித்தபோது கேலி செய்யப்பட்டார், ஏனென்றால் "புனித மனிதர்கள் ஒருபோதும் தம்மைச் சுத்தம் செய்ய மாட்டார்கள்" என்று அவர்கள் நம்பினர். அவர் கடினமான, வறண்ட இடங்களில் உணவு கிடைக்காமல் பெரும்பாலும் பார்லி தானியத்தை உண்டார். எல்லா இடங்களிலும் எதிர்ப்பு காணப்பட்டது. அதுவும் இந்தியாவின் எல்லைக்கு அப்பால் உள்ள கீழ் திபெத்திலேயே அவ்வளவு எதிர்ப்பு.

சுந்தர் சிங் தமது இருபதாம் வயதைக் கடந்தபோது அவருடைய ஊழியம் அதிகம் விரிவடைந்தது. அவருக்கு முப்பது வயது ஆவதற்கு முன்பே அவருடைய பெயரும் படமும் கிறிஸ்தவ உலகம் முழுவதும் தெரிந்திருந்தது. அவர் அணுகக்கூடியவராகவும் தாழ்மையுடையவராகவும், வேடிக்கை உணர்வு மற்றும் இயற்கையின் மீதான காதல் உடையவராகவும் காணப்பட்டார். இதனால், அவரது செய்திகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. "அவர் இயேசுவைப் போல தோற்றமளிப்பது மட்டுமல்லாமல், இயேசு பேசியதைப் போலவே பேசுகிறார்,” என்று பலர் கூறினார்கள். இருப்பினும், அவரது உரையாடல்கள் மற்றும் அவரது தனிப்பட்ட பேச்சுகள் அனைத்தும் ஆழமான ஜெப வாழ்க்கையிலிருந்து வெளிப்பட்டன. 1918-இல் அவர் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் நீண்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மறு ஆண்டு, பர்மா, மலாயா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்குச் சென்றார்.

காட்டு ஜீவராசிகளின் மீது அவருக்கு அதிகாரம் இருந்தது, அவர் ஜெபம் செய்துகொண்டிருக்கும்போது பதுங்கி வந்த சிறுத்தையை அவர் தடவிக்கொடுத்தவுடன் அது தலையைக் குனிந்தபடி நின்றது. அவர் தீய சக்திகள் மீதும் அதிகாரம் கொண்டிருந்தார். மந்திரவாதி ஒருவன் அவரை ஓர் இரயில் பெட்டியில் கடத்த முயன்றான். அது வாய்க்கவில்லை என்றவுடன் அந்த மந்திரவாதி சாதுவின் பையில் இருக்கும் வேதாகமத்தைக் குற்றம் சாட்டினான். நோய் மீதும் பெலவீனத்தின் மீதும் அவருக்கு அதிகாரம் இருந்தது, இருப்பினும் அவர் தனது குணப்படுத்தும் வரங்களை ஒருபோதும் வெளிப்படுத்த அனுமதிக்கவில்லை.

சுந்தர் சிங் மேற்கு நாடுகளுக்கு இரண்டு முறை விஜயம் செய்தார். ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் பல நாடுகளுக்குப் பயணம் செய்தார். பல மரபுகளைக் கொண்ட கிறிஸ்தவர்களால் அவர் வரவேற்கப்பட்டார். அவருடைய வார்த்தைகள் மக்களின் இதயங்களில் ஊடுருவின. மேற்கு நாடுகளில் எங்கும் காணப்பட்ட பொருளாசை, வெறுமை மற்றும் மதச்சார்பற்ற தன்மை ஆகியவற்றைக் கண்டு சுந்தர் திகைத்துப் போனார். அது ஆசிய மக்களின் கடவுள் பக்திக்கு முரண்பாடாக இருந்தது.

சுந்தர் சிங்கின் வரங்கள், அவரது தனிப்பட்ட ஈர்ப்பு, கிறிஸ்துவை அவர் இந்திய மக்களுக்கு வழங்கிய விதம் ஆகியவை அவருக்கு இந்திய தேவாலயங்களில் ஒரு தனித்துவமான தலைமைத்துவ நிலையை வழங்கியிருக்கலாம். ஆனால், அவரது வாழ்க்கையின் இறுதிவரை அவர் தனக்காக எதையும் தேடாத மனிதராக இருந்தார். மாறாக, அனைவருக்கும் கிறிஸ்துவை வழங்குவதை மட்டுமே நோக்கமாகக்கொண்டார். அவர் எந்தப் பிரிவிலும் உறுப்பினராக இருக்கவில்லை, எல்லாவிதமான கிறிஸ்தவர்களுடனும் அவர் நல்லுறவைப் பகிர்ந்துகொண்டாலும், சொந்தமாக எந்த ஸ்தாபனத்தையும் தொடங்க முயற்சிக்கவில்லை. அவர் தனது சொந்த மக்களைக் கிறிஸ்து இயேசுவுக்கு அறிமுகப்படுத்துவதற்காகவே வாழ்ந்தார்.

சுந்தர் சிங் வழக்கமாக கோடைகாலங்களில் திபெத்துக்குச் செல்வதுண்டு. 1923-ஆம் ஆண்டில் அவர் திபெத்திற்கு தம் கடைசிப் பயணத்தை மேற்கொண்டார். அவர் சோர்வுடன் திரும்பி வந்தார். அவருடைய பிரசங்க நாட்கள் முடிவுக்கு வந்தன. அடுத்த சில ஆண்டுகளில், அவர் தனது சொந்த வீட்டில் அல்லது சிம்லா மலைகளில் உள்ள அவரது நண்பர்களின் வீட்டில் தங்கியிருந்து தியானம் மற்றும் ஐக்கியத்தில் ஈடுபட்டதோடு பல புத்தகங்களையும் எழுதினார். அவரது எழுத்துகள் அனைத்தும் ஆழமான கிறிஸ்தவ வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டவை. அவர் தனது வாழ்நாளில் எட்டுப் புத்தகங்களை எழுதியுள்ளார்.

1929-இல், தனது நண்பர்களின் ஆலோசனைகளை மீறி, சுந்தர் திபெத்துக்கு ஒரு கடைசிப் பயணத்தை மேற்கொள்ளத் தீர்மானித்தார். ஏப்ரலில் அவர் சிம்லாவுக்குக் கீழே உள்ள கல்கா என்ற சிறிய நகரத்தை அடைந்தார். நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள இந்து மதத்தின் புனித ஸ்தலங்களில் ஒன்றான கைலாஷ் மலைக்குத் தங்கள் சொந்த மலையேற்றத்தைத் தொடங்கும் யாத்ரீகர்கள் மற்றும் புனித மனிதர்களிடையே தனது மஞ்சள் அங்கியில் ஒரு வயதான தோற்றத்துடன் சென்றார். அதன் பிறகு, எங்குச் சென்றார் என்று தெரியவில்லை. அவர் ஓர் ஆழமான பாதையில் விழுந்தாரா அல்லது சோர்வால் இறந்தாரா அல்லது அவரது எஞ்சிய வாழ்க்கையை ஜெபம் மற்றும் தியானத்தில் செலவிடுவதற்காக தனிமையில் இருந்தாரா என்பது ஒரு மர்மமாகவே இருக்கிறது. சாது சுந்தர் சிங் இந்திய தேவாலயத்தின் வளர்ச்சிக்கான வரலாற்றில் தலையாய இடம் வகித்து வருகிறார்.

இமயமலை சுவிசேஷம்

நவம்பர் 24, 1983 அன்று காலை ஜெபித்துக் கொண்டிருந்தபோது, ஒரு தரிசனத்தில் சகோதரர் சாது சுந்தர் செல்வராஜ், "நேபாளம் சென்று பிரசங்கி!" என்ற வார்த்தைகளைக் கண்டார். கர்த்தராகிய ஆண்டவரை நோக்கி அவர் மேலும் காத்திருந்தபோது, கர்த்தராகிய இயேசு, "என் வருகைக்கு என் நேபாள மணவாட்டியை ஆயத்தப்படுத்து!" என்று கூறினார். இந்தக் கட்டளை சகோதரர் சாதுவை நேபாளத்தின் மர்ம இராஜ்யத்திற்குச் செல்லத் தூண்டியது, அங்கு இந்து மற்றும் பௌத்த மதங்கள் விசித்திரமான முறையில் பிண்ணி பிணையப்பட்டிருந்தன.

சகோதரர் சாது முதன்முதலில் செப்டம்பர் 1986-இல் நேபாளத்திற்குச் சென்றார். அன்றிலிருந்து அவர் நேபாளம், இந்தியா மற்றும் பூட்டானில் வாழும் மில்லியன் கணக்கான நேபாள மக்களைச் சந்தித்து வருகிறார். ஆயிரக்கணக்கானோர் தேவனுடைய இராஜ்யத்தில் இரட்சிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெற்று, பல்வேறு நோய்கள் மற்றும் பெலவீனங்களில் இருந்து தேவனின் வல்லமையால் குணமடைந்துள்ளனர்.

செப்டம்பர் 1986 முதல் நேப்பாள மக்களுக்காக ஒரு செயல் திட்டம் தீட்டப்பட்டது. அத்திட்டத்தில் பின்வருவன அடங்கும்: சுவிசேஷ பிரச்சாரங்கள் (நற்செய்தி விழா), மறுமலர்ச்சிக் கூட்டங்கள், விசுவாசி மாநாடுகள், இளைஞர் முகாம் கூட்டங்கள் (இமயமலை இளைஞர் முகாம் கூட்டம்), பெண்கள் மாநாடுகள் (எழும்பு தெபோரா மகளிர் மாநாடு), ஒலி மற்றும் ஒளிப்பதிவு நாடாக்களில் புத்தகங்கள் மற்றும் செய்திகள்.

நேபாள விசுவாசிகள் தேவனுடைய வார்த்தையை ஆழமாக உட்கொள்கிறார்கள். தேவனுடைய இராஜ்யத்தின் வேலைக்கான பாத்திரங்களாகத் தங்களை ஒப்புக்கொடுத்து, தேவனின் அழைப்பையும் பலர் ஏற்றுக்கொள்கிறார்கள்.

இளைஞர் முகாம்

இமயமலை ஜோசுவா முகாம் கூட்டம் ’05

2005-ஆம் ஆண்டு முகாம் கூட்டத்தின் கருப்பொருள் 'அனைத்தும் புதிது' என்பதாகும். பல விஷயங்களில் இது உண்மையில் எங்கள் அனைவருக்கும், அதாவது இளைஞர்கள் மற்றும் கூட்டத்தைத் திட்டமிடுவதிலும் நடத்துவதிலும் ஈடுபட்டிருந்த எங்களுக்கு ஒரு புதிய வகையான அனுபவமாக இருந்தது.

கூட்டம் மேற்கு வங்காளத்தில் (இந்தியா) காலிம்போங்கில் 2005, ஜனவரி 7 முதல் 12 வரை நடந்தாலும், பல மாதங்களுக்கு முன்பே நிர்வாகப் பணிகள், தீவிர ஜெபம், உபவாசம், உதவியாளர்கள் மற்றும் ஊழியர்கள் முன்வருவது என அனைத்து ஆயத்தமும் பல்வேறு வகைகளில் தொடங்கியது. எவ்வாறாயினும், தேவன் செய்யவிருந்த பெரிய காரியத்தைக் காண நாங்கள் யாரும் உண்மையில் தயாராக இல்லை.

ஜனவரி 7-ஆம் தேதி முகாம் தொடங்கியது. அதிகாலையில், பங்கேற்பாளர்கள் ஆர்வத்தோடு பதிவு செய்யும் இடங்களில் குவியத் தொடங்கினர். மதியத்திற்கு முன்பே, இடம் நிரம்பிவிட்டது. கிடைக்கக்கூடிய ஒவ்வோர் இருக்கை மற்றும் தங்கும் இடம் நிரப்பப்பட்டது. ஆனால் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்துகொண்டே இருந்ததால் அவர்களுக்குக் கலையரங்குகளில் இடமோ, விடுதியில் தங்கும் வசதியோ இல்லை. மேலும் நாற்காலிகள் விரைவாகக் கலையரங்கத்திற்குள் கொண்டு வரப்பட்டன. மாலையில், இன்னும் பல நாற்காலிகள் போடப்பட்டன. அடுத்த நாள் வேறு வழியின்றி மக்களை மேடையிலும் உட்கார அனுமதித்தோம். கடந்த ஏழு வருடங்களாக எங்களின் முந்தைய கூட்டங்கள் எதிலும், வாலிபர்கள் மற்றும் இளைஞர்கள் தேவனுக்காக இவ்வளவு வாஞ்சையுடன் இருப்பதை நாங்கள் பார்த்ததில்லை. அவர்கள் கூட்டத்தில் இருக்க ஆசைப்பட்டார்கள். நிர்பந்தத்தின் காரணமாக, தாமதமாக வந்த பலர் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இமயமலைப் பகுதி முழுவதிலுமிருந்து இளைஞர்கள் வந்தனர்: சிக்கிம், டார்ஜிலிங், குர்சியோங், கலிம்போங், சிலிகுரி, டியோர்ஸ் மற்றும் அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் பூட்டான் மற்றும் பீகார் கூட. 95% பேர் முதல் முறையாக இந்த முகாமில் கலந்து கொண்டனர்.

ஜோசுவா பாடகர்களின் உற்சாகமான ஆராதனை, முதல் அமர்விலிருந்தே கலையரங்கத்தில் தேவனின் பிரசன்னத்தைக் கொண்டு வந்தது. ஷோஃபர் வாத்தியம் ஊதப்பட்டு, சாது ஐயா இயேசுவை "கடா" (பாரம்பரிய பட்டுத் தாவணி) உடன் வரவேற்றபோது, முழுச் சூழலும் திடீரென மாறியது. தேவன் எங்கள் நடுவில் நடமாடுவதை உண்மையில் உணர முடிந்தது!

Youth Meeting

முதல் செய்தியில்,1997-இல் தேவன் அவருக்கு வெளிப்படுத்தியபடி, ஜோசுவா முகாம் சந்திப்பின் நோக்கத்தை சாது ஐயா பகிர்ந்து கொண்டார். ‘இளைஞர்கள் மூலம் முழு இமயமலைப் பகுதியையும் தொட வேண்டும்’ என்பதே தேவனின் நோக்கமாகும். ‘தங்கள் வாழ்க்கையைக் கர்த்தருக்குக் கொடுங்கள்’ என இளைஞர்களைத் தேவனிடம் திரும்புமாறு அவர் அறிவுறுத்தினார். பல நூறு இளைஞர்களும் தேவ குரலுக்குச் செவி சாய்த்து எழுந்தனர்.

அடுத்த நாளில், தேவனின் மற்ற ஊழியர்கள் அபிஷேகம் செய்யப்பட்ட செய்திகளைப் பகிர்ந்துகொண்டனர். தேவ செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தது. REV. ஜோஸ் ரோக்கோ பரிசுத்ததைப் பற்றி போதித்தார்; REV. ஜாக் இயோ தேவனின் தந்தைத்துவத்தைப் பற்றிப் பேசினார்; REV. ஸ்டெல்லா ரோக்கோ மக்களுக்கு ஜெபிக்கக் கற்றுக் கொடுத்தார்; மற்றும் திரு. சில்வானஸ் தமாங் தேவனின் வாசஸ்தலமான பெத்தேலைப் பற்றிப் பேசினார்.

ஆராதனை மற்றும் தேவ வார்த்தையைப் பகிரும்போது, மக்கள் தேவனை விசுவாசித்து ஒப்புக்கொடுத்தனர். அவர்கள் தாங்கள் வாழும் பாவமான (போதைப்பொருள், மது, பாலியல் ஆசை) வாழ்க்கையிலிருந்து மனந்திரும்பத் தொடங்கினர். நூற்றுக்கணக்கானோர் அன்றிரவு தங்களை அடிமைத்தனத்திலிருந்து தேவன் விடுவித்தார் என சாட்சி கூறினர்.

திருமதி அமுதா 'பாலியல் மற்றும் தூய்மை' குறித்த பட்டறையை நடத்தினார். அவர் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளிப்படையாகவும் நேர்மையாகவும் கையாண்டார். இந்தப் பட்டறையின் மூலம் தேவன் தங்கள் வாழ்க்கையை எப்படித் தொட்டார் என்பதைப் பல இளைஞர்கள் வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர்.

பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்திற்காக ஜெபிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட பகுதி, குறிப்பாக வல்லமை வாய்ந்த தருணமாக இருந்தது. சாது ஐயா தலைமையில் சக பங்கேற்பாளர்கள் இதர வாலிபருக்காக ஜெபித்தனர். அவ்வேளையில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் பெற்றனர். தேவனின் அபிஷேக வல்லமை மக்கள் மீது இறங்கியது. கர்த்தரின் மகிமை மிகவும் பலமாக இருந்தது. மக்கள் எல்லா இடங்களிலும் பரிசுத்த ஆவியின் நிரப்புதலால் விழுந்தனர். சாது ஐயா மூலம் பரிசுத்த ஆவியானவர், பல்வேறு நபர்களுக்குப் பல தனிப்பட்ட தீர்க்கதரிசனங்களை வழங்கினார்.

ஜோசுவா முகாம் கூட்டத்தின் ஆறு நாட்கள், 1997-இல் சகோதரர் சாது அவர்களுக்கு தேவன் காட்டிய தரிசனத்தை அதிக அளவில் நிறைவேற்றியது.

இந்திய, ஆஸ்திரேலிய, அமெரிக்க மற்றும் சிங்கப்பூர் சகோதரர்களை உள்ளடக்கிய ஆராதனைக் குழு, நடனக் கலைஞர்கள் மற்றும் ஊழியக் குழு ஆகியோரின் கடின உழைப்பு மற்றும் அவர்களின் பணிவான ஊழியத்தால் உண்மையில் மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டனர்.

தேவனுக்கே மகிமை உண்டாவதாக!

பெண்கள் மாநாடு

"தெபோராலே எழும்பு!" மகளிர் மாநாடு ’05

தெபோராள், வேதாகமத்தில், தேவனுக்கு ஊழியம் செய்ய அழைக்கப்பட்ட ஒரு பெண்ணின் முன்மாதிரியாகத் திகழ்கிறார். பண்டைய யூத சமுதாயத்தில், இஸ்ரேலின் கோத்திரங்களில் பெண்ணை எண்ணப்படுவதற்குத் தகுதியாகக் கூட கருதவில்லை. ஆயினும், தேவனின் அங்கீகாரத்துடன் சிசெராவைத் தெபோராள் தோற்கடித்து வலுவான சமூக விதிமுறைகளை உடைத்தாள் (நியாயாதிபதிகள் 4:1-23).

பல ஆண்டுகளுக்கு முன்பு, சகோதரி அமுதா அருணாசலம் அவர்களுக்குத் தேவன், குடும்பம் மற்றும் சமுதாயத்திற்குச் சேவை செய்வதற்கும், சமூகத்தின் தவறான நடத்தையால் ஏற்பட்ட காயங்களைக் கட்டுவதற்கும், ஆவிக்குரிய ரீதியில் பெண்ணைச் சுதந்திரமாக மாற்றுவதற்கும் இதே போன்ற தரிசனத்தை வழங்கினார்.

நான்காவது முறையாக 2005-இல் தெபோரா மாநாடு மேற்கு வங்காளத்தின் (இந்தியா) காலிம்போங்கில் நடைபெற்றது. தேவ தரிசனம் ஒரு பெரிதான வகையில் நிறைவேறுவதைக் கண்டோம். ஜனவரி 14 முதல் 16 வரை, இமயமலைப் பகுதி முழுவதிலும் இருந்து சுமார் 350 பெண்கள் தேவனை ஆராதிக்கத் திரண்டு வந்தனர். அவர்கள் வெவ்வேறு பிரிவுகளிலிருந்து வந்தவர்கள். ஆனால், அவர்கள் தேவனுக்கு முன்பாக ஒரே பெண்களாக வந்தனர். மாநாட்டை சாது சுந்தர் செல்வராஜ் துவக்கி வைத்து, கர்த்தரின் பார்வையில் பெண்கள் விஷேஷமானவர்கள் என்றும், பெண்கள் தேவனின் தனித்துவமான படைப்பு என்றும் கூறினார். முகாமின் முதல் மாலை வேளையிலேயே, பல ஆண்டுகளாக அவர்கள் சுமந்துகொண்டிருந்த மனக்காயங்களைத் தேவன் குணப்படுத்தினார்.

அடுத்த நாள், திருமதி அருணாசலம் மரணிக்கும் உலகில் வாழ்க்கையைப் பிறப்பிக்க தேவன் விரும்புவதால், மக்களுக்கு உயிர் கொடுக்கப் பெண்களைப் பயன்படுத்துகிறார் என்ற அபிஷேகமிக்க போதனையைப் பகிர்ந்து கொண்டார். அவர் தனது போதனையை முடித்தவுடன், தேவனிடமிருந்து ஒரு தொடுதலைப் பெற மக்களை அழைத்தார். நூற்றுக்கணக்கான பெண்கள் முன்வந்தனர் மற்றும் தேவனின் வல்லமை வாய்ந்த தரிசனம் அங்கு விளங்கினது.

himalayas_deborah2

போதகர் சரோஜ் ரோங்கோங்கின் போதனைகளாலும் மக்கள் பெலப்பட்டனர். அவர் இளவரசியின் பாத்திரத்தைப் பெண்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்கிறார்கள், அதனால் மன்னரின் சார்பாக எவ்வாறு செயல்படலாம் என்பதையும் பகிர்ந்து கொண்டார். நாம் பேசும் வார்த்தையின் மூலம் கிடைக்கும் தீர்க்கதரிசனம் மற்றும் ஆசீர்வாதத்தின் முக்கியத்துவத்தையும் அவர் கற்பித்தார்.

திருமதி ஹீதர் ரெக்ஸ் ஊழியம் குறித்த ஒரு விழிப்புணர்வுப் பாடத்தைப் பகிர்ந்தார். அவர் நேபாள மக்களிடையே வாழும் இங்கிலாந்தைச் சேர்ந்த மிஷனரி என்பதால், அவரது செய்தி மக்களை வல்லமை வாய்ந்த முறையில் சந்தித்தது.

பெண்களைத் தேவன் எப்படிப் பார்க்கிறார் என்பது பற்றி போதகர் ஸ்டெல்லா போதித்தார். தாழ்வு மனப்பான்மையை மேற்கொள்வது பற்றியும் போதகர் ஸ்டெல்லா போதித்தார்.

மாநாட்டின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஜோசுவா பாடகர்களின் தலைமையில் நிகழ்ந்த வல்லமை நிறைந்த ஆராதனை. கர்த்தருக்கு முன்பாகப் பெண்கள் பாடி, ஆரவாரமான நடனத்தோடு ஆடும்போது, தெய்வீக மகிமை மக்கள் மீது இறங்கியது. பாவங்கள், அடிமைத்தனங்கள், காயங்கள், மனச்சோர்வு மற்றும் பயம் ஆகியவற்றிலிருந்து விடுதலை பெற்றனர்.

பல பெண்கள் தேவன் தாங்கள் எவ்வகையில் ஊழியம் செய்ய வேண்டும் என விரும்புகிறாரோ, அவ்வகையில் ஊழியம் செய்ய தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தார்கள்.

தேவனுக்கே மகிமை உண்டாவதாக!

நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே!

கிரேக்க மொழியில் ‘அந்திரேயா’ அல்லது 'ஆண்ட்ரூ' என்றால் 'ஆடவரின் நற்பண்புகள் கொண்ட, ஒரு அழகிய தோற்றமும் துணிச்சலும் கொண்டவர் என்று பொருள். இது ஆண்ட்ரூ கர்தக் என்று அழைக்கப்படும் உயரமான, மெலிந்த மற்றும் அழகான இளைஞனை சரியாக விவரிக்கிறது. சாது சுந்தர் செல்வராஜ் அவர்களின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் ஆண்ட்ரூ கர்தக்.

ஆண்ட்ரூ தனது கல்வியைக் காலிம்போங்கில் பெற்றார். அவர் ஒரு தெய்வீகக் குடும்பத்தில் வளர்ந்தாலும், 1988-இல் சாது ஐயா நடத்திய சுவிசேஷக் கூட்டத்தில் தான் கர்த்தராகிய இயேசுவைத் தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார். அவர் தனது வாழ்க்கையைத் தேவனுக்குக் கொடுத்த தருணத்திலிருந்து, ஊழியத்திற்கான தேவ அழைப்பை உணர்ந்தார். பின்னர் அவர் ‘இயேசு ஊழியத்தில்’ (Jesus Ministries) சேர்ந்தார். மற்றும் சாது ஐயாவின் முக்கிய ஊழியராகவும் அன்பான ஆவிக்குரிய மகனாகவும் ஆனார்.

அவர் சாது ஐயாவுடன் இந்தியா, நேப்பாளம் மற்றும் பூட்டானில் உள்ள இமயமலையின் தொலைதூர இடங்களுக்கு விரிவாகப் பயணம் செய்தார். ஒன்றாக, அவர்கள் ஏராளமான திபெத்திய துறவிகளுக்கும், மற்றும் நகரங்கள் மற்றும் கிராமங்களில் வாழும் பொது மக்களுக்கும் கிறிஸ்துவை அறிவித்தனர். அதுமட்டுமல்லாமல், அவர் ஹிசாப் பாடல் ஊழியத்திலும் ஈடுபட்டார். இந்தக் குழுவுடன் வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்து, கிறிஸ்து இயேசுவின் அன்பைத் தனது மெல்லிசைக் குரல் மூலம் நூற்றுக்கணக்கான மக்களுக்கு சென்றடையச் செய்தார்.

1992-இல் அவர் ஒரு வேதாகமப் பள்ளியில் கலந்துகொள்ள சிங்கப்பூர் சென்றார். அங்கு அவர் தனது அழகான வருங்கால மனைவி அமுதா அருணாசலத்தைச் சந்தித்தார். சிறிது காலம் பழகிய பின் இரு வீட்டாரின் ஆசீர்வாதத்துடன், அவர்கள் பிப்ரவரி 19, 1994 அன்று மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து கொண்டனர்.

GoodServent

ஆண்ட்ரூவுக்குத் திடீரென நுரையீரலில் கடுமையான தொற்று நோய் ஏற்பட்டது. சிங்கப்பூரிலும் இந்தியாவிலும் அவருக்கு நீண்ட காலம் சிகிச்சை அளிக்கப்பட்டாலும், அவரது உடல்நிலை மோசமடைந்து வந்தது. இந்தியாவில், சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்த இருளான காலக்கட்டத்திலும், அவர் தேவனிடம் ஏன் என்று ஒருபோதும் கேள்வி கேட்கவில்லை. மேலும், அவர் மனந்தளராது வேதாகமத்தைப் படித்து ஜெபத்திலும் ஆராதனையிலும் நேரத்தைச் செலவிட்டார். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவர் முகத்தில் எந்த மனச்சோர்வும் தென்படவில்லை. தாம் ஆண்டவர் இயேசுவுக்கு உரியவர்; தேவன் தம் சித்தத்தின் படி செய்வது அவருடைய விருப்பம் என விசுவாசித்தார்.

1994 ஏப்ரல் கடைசி வாரத்தில் அவரது உடல்நிலை சற்று சீரடைந்தது. அது மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியது. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் மிகவும் நிம்மதியடைந்து ஆண்ட்ரூவையும் அமுதாவையும் பார்க்க ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் திடீரென மே 2-ஆம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்தது. அமுதா, ஆண்ட்ரூவின் உடலில் சில மணி நேரம் மகிமையின் மேகங்கள் மிதப்பதைக் கண்டாள். மே 3, 1994 அன்று அதிகாலையில், ஆண்ட்ரூ தனது பந்தயத்தை முடித்துக்கொண்டு, ஆண்டவர் இயேசுவோடு இருக்க பரம வீட்டிற்கு அழைக்கப்பட்டார். ஆண்ட்ரூ, நோய்வாய்ப்பட்ட பல மாதங்களாக, தேவனைக் கேள்வி கேட்டதில்லை. “ஏன் எனக்கு இந்நிலை" என்று கேட்டதில்லை. "இது நியாயமில்லை" என்று ஒருபோதும் சொன்னதில்லை. கசப்புணர்வு மற்றும் கோபத்தை சுவாசித்ததில்லை. ஆண்ட்ரூ அல்லது அவரது அன்பு மனைவி அமுதா தோல்வியைச் சந்தித்தார்களா? இல்லை! ஆண்ட்ரூ கடைசிவரை கர்த்தருக்கு உண்மையாக இருந்தார். அவர் வெற்றி சிறந்தார். மரணத்திற்குக் கூர் இல்லை, பாதாளத்திற்கு ஜெயம் இல்லை, அது அவனை ஆட்கொள்ளாது (1 கொரி 15: 55-57).

ஆண்ட்ரூவின் வாழ்க்கை இன்றைய இளைஞர்களுக்கு பெரும் உத்வேகமாகவும் சவாலாகவும் இருக்கிறது. அவர் ஒரு ஜெயங்கொண்டவராக இருந்தார். வெற்றியாளராகவும், இறுதிவரை கிறிஸ்தவ நம்பிக்கையில் உறுதியாகவும் இருந்தார். அவர் தனது வாழ்க்கையில் ஒரு வெற்றி வீரராக இருந்தார். ஆண்ட்ரூ அழைக்கப்பட்டார், அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார், அவர் உண்மையுள்ளவராகக் காணப்பட்டார் (வெளி. 17:14). அவரைப் பற்றி ஆண்டவராகிய இயேசு உண்மையாகவே, "நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி" (மத். 25:23) என்றிருப்பார்.

சோரெங் ஜெபத் திருவிழா 2004

சோரெங், இந்தியாவின் சிக்கிமின் மேற்கு மாவட்டத்தின் துணைப் பிரிவுத் தலைமையகங்களில் ஒன்றாகும். பொதுவாக ஓர் அமைதியான மற்றும் மந்தமான நகரம் அது. நவம்பர் 3, 2004-இல் ‘சோரெங் ஜெபத் திருவிழா’ நடந்தது. சிறந்த பேச்சாளரின் கிறிஸ்தவ இசை ஒலித்தது மற்றும் அருகிலுள்ள இடங்கள் மற்றும் பிற வெளி மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலமான மேற்கு வங்கத்திலிருந்தும் கூட மக்கள் வந்து குவிந்தனர்.

அவர்கள் நீண்ட தூரம் பயணித்திருந்தனர்; சிலர் வாகனங்களில் வந்தனர்; மற்றவர்கள் பல மணி நேரம் நடந்தனர். வாராவாரம் தொலைக்காட்சியில் பார்த்துவந்த 'குணமாக்கும் அன்பு' நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அவர்கள் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய சாது சுந்தர் செல்வராஜ் அவர்களின் போதனையைக் கேட்க நேரில் வந்திருந்தார்கள்.

தொலைக்காட்சி ஊழியத்தின் மூலம் தேவன் இந்தப் பிராந்தியத்தில் உள்ள மக்களைத் தொட்டது தெளிவாகத் தெரிந்தது. பலருக்கு அத்திருவிழாவில் கலந்துகொள்வது ஓர் அரிய வாய்ப்பாக இருந்தது. தேவ மனிதரான சாது ஐயா தனிப்பட்ட முறையில் ஜெபிக்கும் கூட்டத்தில், அவர்கள் தங்கள் பிரச்சினைகளையும் துக்கங்களையும் தேவனிடம் கொண்டு வரமுடியும் என நம்பினர்.

நாங்கள் ஜெபம் நடக்கும் இடத்தை நெருங்கிய போது மாலை 5:30 மணி இருக்கும். எல்லாம் அமைதியாக இருந்தது. இமயமலையிலிருந்து நேராகக் குளிர்ந்த காற்று வீசியது. நாங்கள் காற்பந்தாட்ட மைதானமான ஜெப அரங்கிற்குள் நுழைந்தபோது, இதயத்தைத் தூண்டும் காட்சி எங்களை வரவேற்றது. நூற்றுக்கணக்கான மக்கள், அவர்களில் ஏராளமான மரபுவழி இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் ஆன்மீகவாதிகள் எங்கள் வருகையை எதிர்பார்த்து ஏற்கனவே கூடியிருந்தனர். அவர்கள் தேவனிடம் இருந்து ஒரு செய்தியைக் கேட்க ஆவலுடன் காத்திருந்தனர்.

GoodServent

அன்று மாலை இயேசுவே உண்மையான தேவன் என்று சாது ஐயா பிரசங்கித்தார். அவர் இந்துவாக இருந்தபோது, தேவன் தனது வாழ்க்கையை எவ்வாறு தொட்டார் என்ற சாட்சியைப் பகிர்ந்து கொண்டார். ஏறக்குறைய இருநூறு பேர் இயேசுவுக்குத் தங்கள் வாழ்வை ஒப்புக் கொடுக்க எழுந்து நின்றனர். அடுத்த இரண்டு நாட்களுக்கு, சகோதரர் சாது, உண்மையான ஒளியாகிய தேவன், பாவத்தாலும் சாத்தானாலும் நம் வாழ்வில் வந்த இருளை எவ்வாறு அகற்றுகிறார் என்பதைப் பற்றிப் பிரசங்கித்தார். நோய்வாய்ப்பட்டவர்களைத் தேவன் எவ்வாறு குணப்படுத்த முடியும் மற்றும் பாவத்தால் சிதைந்த வீடுகளை எவ்வாறு சரிசெய்வார் என்பதையும் பற்றி அவர் கூறினார்.

சரீர சுகத்திற்கான ஜெபம் நடத்தப்படுவதற்கு முன்பு, சுமார் முந்நூறு பேர் எழுந்து நின்று, கிறிஸ்துவைத் தங்கள் வாழ்வில் ஏற்றுக்கொள்ளும் அழைப்பிற்குப் பதிலளித்தனர். ஜெபத்தின் போது, குறிப்பிட்ட நபர்களின் குறிப்பிட்ட பெயர்களையும் வாழ்க்கையையும் தேவன் வெளிப்படுத்தினார். தேவனின் பிரசன்னம் மக்கள் மத்தியில் இறங்கியதால் நோயின் சங்கிலிகள் உடைந்தன.

மங்கலான பார்வை மீட்டெடுக்கப்பட்டது. முடமானவர்கள் நடக்க ஆரம்பித்தனர் மற்றும் நாள்பட்ட நோய்கள் மறைந்துவிட்டன என்று ஏராளமான மக்கள் சாட்சி கூறினார்; பிறப்பிலிருந்து முற்றிலும் காது கேளாதவர்களுக்கு முதல் முறையாகக் காது கேட்க ஆரம்பித்தது.

சோரெங்கில் அவர் செய்த மகத்தான செயல்களுக்காக நாம் தேவனுக்கு எல்லா மகிமையையும் செலுத்துகிறோம். சோரெங்கிலுள்ள தேவாலயங்களின் ஒன்றுபட்ட முயற்சியைத் தேவன் கௌரவித்து ஆசீர்வதித்தார். அவர்கள் இரவும் பகலும் உழைத்து, பல மாதங்கள் உபவாசத்திலும் ஜெபத்திலும் ஈடுபட்டு, தேவன் பலரின் வாழ்க்கையைத் தொட வேண்டுமென விரும்பினர். தேவன் அவர்களின் மன்றாட்டு ஜெபத்தைக் கேட்டார். அல்லேலூயா!

உலக சுவிசேஷம்

1979-ஆம் ஆண்டு முதல் சாது சுந்தர் செல்வராஜ் அவர்களின் ஊழியப்பணியில் வேகம் காணப்பட்டது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, "உலகமெங்கும் சென்று, சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்" (மத். 28:19) என்று கட்டளையிட்டார். அவர் மேலும் "எனக்குச் சாட்சியாக இருங்கள்" (அப்போஸ்தலர் 1:8) எனக் கூறினார். இத்தூண்டுதலினால் சாது ஐயா, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்காக முடிந்தவரை பலரை ஆதாயப்படுத்த வேண்டுமென இந்த பூமியின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை நற்செய்தியைப் பிரசங்கிக்கத் தொடங்கினார்.

இந்த உலகின் ஆறு கண்டங்களிலும் (வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா) 40-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சாது ஐயாவை தேவனாகிய கர்த்தர் அனுப்பினார்.

நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்த திரும்பி வரும் வரை சாது ஐயா ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை விடாமுயற்சியுடன் பிரசங்கித்துக்கொண்டே இருப்பார். சாது ஐயாவைத் தம் மகத்தான மகிமைக்குச் சாட்சியாகப் பயன்படுத்தும் சர்வ வல்லமையுள்ள தேவனின் இரக்கமுள்ள கிருபைகளுக்காய் நாங்கள் மனத்தாழ்மையுடன் களிகூர்ந்து நன்றி செலுத்துகிறோம்.

திபெத்திய சுவிசேஷம் பற்றி மேலும் படிக்கவும்